முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார
- Tuesday, 26 July 2016 10:23
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசனை வழங்கியமை தொடர்பில் “முரளி தேசத்துரோகி” என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வருத்தம் வெளியிட்டு தன்னுடைய ருவிட்டர் தளத்தில் குமார் சங்ககார இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குமார் சங்ககார தெரிவித்துள்ளதாவது, “முரளி இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லை. முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனமே முரளியிடம் கேட்க வேண்டும்.
நாங்கள் அவரை நினைத்து கட்டாயம் பெருமைபட வேண்டும். எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் பந்துவீச்சு தொடர்பில் ஆலோசனை கேட்க வந்தால் முரளியே முதலாவதாக சென்று இலவசமாக நீண்ட நேரம் அவர்களுக்கான உதவிகளை வழங்குபவர். முக்கிய பிரச்சினைகள் ஏதும் முரளியுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இருப்பின் அதை நிவர்த்தி செய்துக்கொள்ள இதுவே சரியான தருணம்.” என்றுள்ளார்.