வரலாற்றுப் பதிவுகளில் 2016 ஆம் ஆண்டு மிக வெப்பமான வருடமாகும் சாத்தியம்!:ஐ.நா
- Saturday, 23 July 2016 13:05
வரலாற்றுப் பதிவுகளில் தொடர்ச்சியாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகள் மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவு செய்யப் பட்டிருந்தன. ஆனால் அச்சாதனையை முறியடிக்கும் விதத்தில்2016 ஆம் ஆண்டும் பூமியில் மனித குல வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகும் திசையில் சென்று கொண்டிருப்பதாக ஐ.நா சபையின் கால நிலை ஏஜன்ஸி எச்சரித்துள்ளது.
இவ்வருடம் முதல் 6 மாதங்களில் உலகளாவிய ரீதியில் நீடித்த வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டே இந்த கணிப்பு எடுக்கப் பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒவ்வொன்றும் முன்னையதை விட ஒரு சாதனையை நிகழ்த்திய வண்ணமே வந்துள்ளன. முக்கியமாக ஆர்டிக் கடலின் பனிக்கட்டி உருகுதல், வளி மண்டலத்தில் கார்பன் டைஆக்ஸைடின் அளவு அதிகரித்தல் என்பன பூகோள வெப்பநிலை அதிகரித்தலில் செல்வாக்கு செலுத்துவதாக உலக வானிலை அவதான நிறுவனமான WMO அறிவித்துள்ளது.
எல் நினோ (El Nino) எனப்படும் பசுபிக் சமுத்திரத்தின் சூழலில் 2015 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக வெப்பநிலை வெகுவாக அதிகரித்திருந்தது. ஆனால் இந்த எல் நினோ நிகழ்வானது தற்போது மறைந்து விட்டது என்றும் ஆனால் பச்சை வீட்டு விளைவு காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றம் இன்னமும் தொடர்கிறது என்றும் WMO செயலாளர் தெரிவித்துள்ளார். பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் தான் மிக அதிகமான வெப்பக் கதிர்கள், தீவிரமான மழை வீழ்ச்சி மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பருவநிலை சைக்கிளோன் புயல்கள் என்பவற்றை ஏற்படுத்துகின்றன.
நாசாவின் தகவல் படி 2016 ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் நீடித்த சராசரி வெப்பநிலை, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த ஆரம்ப தொழில் துறை யுகத்தில் நிலவிய வெப்பநிலையை விட 1.3 டிகிரி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.