Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தை தொடர்பில் ஜேர்மனி சென்றுள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே

பிரிட்டனின் புதிதாகத் தெரிவு செய்யப் பட்ட பிரதமரான தெரெசா மே ப்ரெக்ஸிட் (Brexit) எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஜேர்மன் சேன்சலர் மேர்க்கெல் உடன் நடத்த ஜேர்மனி சென்றுள்ளார்.

கடந்த வாரம் பிரிட்டன் முன்னால் பிரதமர் டேவிட் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்த பின் புதிய பிரதமராக தெரேசா மே தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

புதிதாக பிரதமர் பதவி ஏற்ற பின்னர் இன்று புதன்கிழமை முதன் முறையாக ஓர் வெளிநாட்டுக்கான உத்தியோகபூர்வ பயணமாக ஜேமனியை சென்றடைந்துள்ளார் தெரெசா. இந்த பயணத்தின் போது பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே இனையும் சந்திக்கவுள்ளார் தெரெசா. ஏற்கனவே புதன்கிழமை இலண்டன் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு இவர் முதன் முறையாக பதில் அளித்தும் இருந்தார். முன்னதாக சுமார் 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக பெரும்பான்மை பிரிட்டன் மக்கள் வாக்களித்ததை அடுத்தே டேவிட் கமெரூன் தானாக முன் வந்து ராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை ஐரோப்பிய யூனியனின் 50 ஆவது தகவல் சட்டத்தின் படி அதில் இருந்து பூரணமாக வெளியேற எடுக்கும் நடவடிக்கைக்கு 2 வருட கால அவகாசம் தேவை என்பது தெரெசா மே எதிர்கொள்ளும் சிரமமான படிக் கல்லாக இருக்கும் எனக் கருதப் படுகின்றது. இதற்கு இணையாக பிரிட்டனின் பொருளாதாரம் தங்கி இருக்கும் ஐரோப்பிய யூனியனின் தனித்த சக்தி வாய்ந்த சந்தையில் இருந்து வெளியேறுவது மற்றும் குடிவரவுக் கொள்கையின் கட்டுப்பாடு என்பனவும் Brexit பேச்சுவார்த்தையில் சிக்கலான படிக் கட்டுக்களே ஆகும். ஐரோப்பிய யூனியனின் தனித்த வலுவான சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரெசா மேயிடம் கேட்கப் பட்ட கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட 2017 ஆம் ஆண்டு கடைசி 6 மாத காலத்தில் ஐரோப்பிய யூனியனின் அதிபர் பதவியை வகிப்பதாக முன்பு தீர்மானிக்க பட்ட பொறுப்பையும் பிரிட்டன் கைவிடுவதாக தெரேசே மே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

comments powered by Disqus