Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

துருக்கியில் இராணுவப் புரட்சி; ஆட்சியதிகாரம் தமது கையில் என்று இராணுவம் அறிவிப்பு; ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு!

துருக்கியின் ஆட்சியதிகாரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று சனிக்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது. 

நாடு பூராவும் இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் இராணுவம் குவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, பாராளுமன்றக் கட்டடம் இராணுவ டாங்கிகள் மூலம் தாக்கப்பட்டதாகவும், இஸ்தான்புல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் முக்கிய ஸ்தலங்களும் இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், சில பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழும் வந்துள்ளன.

துருக்கி தலைநகர் அங்காராவில் துப்பாக்கி சூடு நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்காராவில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்ததாக இராணுவம் அறிவித்துள்ளது. அங்காராவில் இராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, இராணுவத்தின் இந்த நடவடிக்கையை துருக்கிப் பிரதமர் பினாலி ஜிஸ்டிரிம் கண்டித்துள்ளார். மக்களினால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தினை தோற்கடிக்க முனைவது அத்துமீறலாகும். ஆயினும், நாட்டின் ஆட்சியதிகாரம் தமது கட்டுப்பாட்டின் கீழேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பேஸ்ரைம் இணையவசதி மூலம் உரைநிகழ்த்திய துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன், இராணுவப் புரட்சியில் ஈடுபட்டோருக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துருக்கியில் பேஸ்புக், ருவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களும் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

comments powered by Disqus