பாஸ்தா பிரியர்களுக்கு நற்செய்தி!:கொழுப்புச் சத்து இல்லை என நிரூபணம்
- Tuesday, 05 July 2016 23:56
ஐரோப்பா முக்கியமாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த மக்களிடையே மிகப் பிரபலமான உணவு பாஸ்தா. இது இன்றைய தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ள போதும் உடற் பருமன் கூடியவர்களுக்கு இது ஆகாது எனவும் உணவுக் கட்டுப் பாட்டை (Diet) மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டும் என்றும் கருதப் பட்டது.
ஆனால் தற்போது உணவு விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் பாஸ்தா உங்களுக்கு ஆபத்தான அளவுக்கு உடற்பருமனை அதிகரிக்காது எனவும் பதிலாக உண்மையில் அது உடல் நிறையைக் குறைப்பதில் தான் உதவுகின்றது என்பதாகும். இதற்காக இத்தாலியின் இரு பகுதிகளில் இருந்து சுமார் 23 000 பொது மக்களிடம் உணவுக் கட்டுப் பாட்டு ஆய்வு நடத்தப் பட்டது. இதில் பாஸ்தா (Pasta) உண்பவர்கள் தமது இடுப்பைக் குறைப்பதில் இருந்து உடற்பருமனைக் குறைப்பது வரை உதவுவது நிரூபிக்கப் பட்டுள்ளது.
வளர்முக நாடுகளில் உடற் பருமன் அதிகரித்தல் மற்றும் நீரிழிவு நோய் என்பன பெரும்பாலான மக்களைப் பாதித்து வருகின்றது. ஏற்கனவே பிரிட்டனில் 3 மில்லியன் பேருக்கு உடற்பருமன் காரணமாக நீரிழிவு நோய் பரவி இருப்பதாகவும் இது 2025 ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியனை எட்டிவிடும் எனவும் அஞ்சப் படுகின்றது குறிப்பிடத்தக்கது.