சுத்தமான குடிநீர் சக்தித் தேவை மற்றும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் சோலார் கணணி வாட்லி
- Tuesday, 10 May 2016 20:04
உலகின் மிகப் பெரிய சூரிய சக்தியால் இயங்கும் கம்பியூட்டர் என்று கருதப்படும் வாட்லி (Watly) வறுமை சூழ்ந்த ஆப்பிரிக்க தேசங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகியுள்ளது. அதாவது இந்த வாட்லி என்ற கணணி எந்திரம் வெறும் சூரிய சக்தி மூலம் மின்சக்தி, சுத்தமான குடிநீர் மற்றும் இணைய சேவை என்பவற்றை வழங்கக் கூடியது ஆகும்.
கானாவில் தற்போது பரிசோதிக்கப் பட்டு வரும் வாட்லி கணணி ஒரு காரின் அளவு இருப்பதுடன் ஒவ்வொரு நாளும் 5000 லீட்டர் சுத்தமான குடிநீரை வழங்கக் கூடியது ஆகும். துணை சஹாரா கண்டத்திலுள்ள ஆப்பிரிக்க தேசங்களில் 625 மில்லியன் மக்கள் மின்வசதி இன்றியும் 39% வீதமானவர்கள் சுத்தமான குடிநீர் இன்றியும் வாடி வருகின்றனர். இம்மக்களுக்கு வாட்லி திட்டம் கிடைக்கப் பெற்றால் அது நிச்சயம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இந்த எந்திரம் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு நிபுணர்களால் வான்வெளி ஆய்வின் (Space Capsule) இற்கான பெயரில் உருவாக்கப் பட்ட போதும் இதன் தற்போதைய இலக்கு வறிய ஆப்பிரிக்க தேசங்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புவதே ஆகும் என இதன் தாபகர்கள் தெரிவித்துள்ளனர். 800 மீட்டர் ஆரை அளவுக்கு வயர்லெஸ் இணைய சேவையையும் செல்போன் மற்றும் ஏனைய இலத்திரனியல் கருவிகளை சார்ஜ் செய்யவும் உதவும் வாட்லி கிரபேன் அடிப்படையிலான ஃபில்டரிங்க் முறையில் நீரை சுத்திகரிக்கின்றது.
15 வருடங்கள் பணியாற்றினால் கூட 5000 பரெல் ஆயில் வெளியிடும் 2500 டன் பச்சை வீட்டு வாயுக்களை இது வெளியிடாது செய்து சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றது. கானாவில் பரிசோதனைகள் முடிந்த பின் வாட்லி நைஜீரியா மற்றும் சூடானில் அறிமுகப் படுத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதைவிட வாட்லி இனை அறிமுகப் படுத்துவதால் இன்னமும் 8 வருடங்களில் ஆப்பிரிக்கா முழுதும் சுமார் 10 000 யூனிட்டுக்கள் திறக்கப் படவும் இதனால் சுமார் 50 000 வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.