கை வீசும் காற்றாய்...
- Sunday, 03 April 2016 13:35
அந்தப் பாடலைக் கேட்கும் போதினிலெல்லாம் இது விதித்துக் கொண்ட விதியா..? அல்லது எழுதப்படாத விதியா..? என்ற கேள்வி எழுந்து மடியும்.
தாஜ்நூரின் இசைமீதான எனது கவனம், அவரது "உழவன் தாத்தா.." பாடலில் இருந்து துவங்கியது எனலாம். கவிஞரும், நண்பருமான 'தமிழ்அலை' இஷாக் அவர்களோடு உரையாடிய சந்தர்ப்பமொன்றில் இப்பாடலைப் பற்றி பேசியிருந்தேன். அதனை மனதிலிருத்தி வைத்திருந்த இஷாக், சென்ற வருடம் தமிழகத்திலிருந்த ஒருநாட்காலை தொலைபேசியில் அழைத்து, தாஸ்நூரைச் சந்திப்போமா? எனக் கேட்டார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் தாஜ்நூரின் இசை பிறக்கும் அழகிய அந்தக் கலையகத்தில் இருந்தோம். அவரது இசையமைப்பில் வெளிவருகின்ற ஒரு இசைத் தொகுப்பின் பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்ந்தோம். ஒவ்வொரு பாடல் ஒலித்து முடிந்ததும், அப் பாடல் குறித்த ஆழமான உரையாடல் என அற்புதமாகக் கழிந்தன நிமிடங்கள்.
தேநீர் பருகிய வேளையில் புலம்பெயர்வாழ்வியலின் எதிர்பாடுகளை அக்கறையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், உங்கள் வாழ்நிலைக்கான ஒரு பாடல் என ஒரு பாடலை ஒலிக்க வைத்தார். எலும்புமச்சையைத் துளைத்துச் செல்லும் உறை குளிரின் கடும் குளிர்மையாய் ஒலித்தோய்தது இசை. அவரது வெளிவரவுள்ள ஒரு இசைத் தொகுப்பிற்கான பாடலது.
இசை , மொழி, வாழ்நிலை, வரலாறு என தொடர்ந்த உரையாடல் மதியம் தாண்டியும் நீண்டது.செவிக்கு மட்டுமன்றி , வயிற்றுக்கும் உணவளித்து மகிழ்ந்தார். அன்றைய சந்திப்பின் பின் இஷாக்கும், நானும், பேசிக் கொள்கையில், அருமையான ஒரு இசைக் கலைஞனுக்கான அங்கீகாரம் இன்னமும் முறையாக வெளிப்படவில்லையோ..? எனும் ஆதங்கமும், தற்புகழ்ச்சிப் படோபம் இன்றி, இசையே தவமாய் தனித்திருக்கும் தாஸ்நூரின் இசை மக்கள் மனதை வெல்லுமெனும் நம்பிக்கையினையும் பகிர்ந்து கொண்டோம்.
ஸ்ரோபரி படத்தில், உத்ரா உன்னிக்கிருஸ்ணன் பாடிய இப்பாடலை இன்று கேட்கையில், தாஜ்நூரோடு கழிந்த அன்றைய பொழுது மீளவும் நினைவுக்கு வருகையில், பா.விஜயின் பாடல் வரிகளை ஆர்ப்பாட்டமில்லாத அந்தக் கலைஞனுடன் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்