Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

வாசிப்பில் அவர் வாழ்வார்

செங்கை ஆழியானிடம் சிறிது காலம் பாடம் படித்திருக்கிறேன். ஆனால் அவர்  என் மனதில் ஆசிரியனாக ஆழப் பதிந்ததை விடவும்,  எழுத்தாளனாகவே இன்றளவும் வாழ்கின்றார்.  இனிமேலும்...

தமிழக எழுத்தாளர்களின் படைப்புக்களில் லயித்துக் கிடந்த காலத்தில், ஈழத்து எழுத்துக்களின் பக்கம் மடைமாற்றியவர்களில் முக்கியமானவர்.  செங்கை ஆழியான், வ.அ.இராசரத்தினம், பால. மனோகரன், தெனியான். நீளும் அந்தப் பட்டியலில் முதன்மையானவர்.

புனைவுகளை, மெய் நிகழ்வுகளாக எழுத்துக்களில் நடத்திக்காட்டியவர் செங்கை ஆழியான்.     " வாடைக்காற்று "   திரைப்படத்திலும் பார்க்க நாவலில் ரசானுபவம் மிகுந்திருப்பதன் காரணத்தினாலேயே இன்றளவும் அந்நாவல் கொண்டாடப்படுகிறது.  

புனைவுகள் தாண்டிச் சிந்திக்க முடியாதவர், செயலாற்ற முடியாதவர், என்பது போன்ற  விமர்சனங்களை, அமைதியாகவே கடந்து சென்றிருக்கின்றார். அதுவும் ஒரு பெரும் பண்புதான் என்பதைக் காலத்தின் வழி நமக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றார்.  

ஆய்வுகளிலும், தொகுப்புக்களிலும், ஈடுபடுபவர்களுக்கு, அவற்றைப் பதிப்பித்தலில் எழும் சிரமங்கள் சொல்லவொண்ணா. அவற்றையும் பலநேரங்களில் தமதாக்கிய வண்ணமே,  அவர்கள் படைத்தார்கள்.  ஈழத்தின் இலக்கியப் பரம்பலை அவ்வாறு உருவாக்கிய படைப்பாளர்களில் செங்கை ஆழியான் க.குணராசாவும் குறிப்பிடத்தக்கவராவார்.

ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, காட்டாறு, என அவரது எழுத்துக்களோடு ஒன்றித்திருந்த அற்புதமான தருணங்கள் இன்று நினைவில் வருகையில், ஏக்கம் ஒன்றும் எழுந்து மறைகிறது.

வாசிக்க வேண்டும். மீண்டும் அந்தப் படைப்புக்களை வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பில் அவர் வாழ்வார். அதுதான் அவரது ஆற்றலுக்கான அஞ்சலி!.

- மலைநாடான்

comments powered by Disqus