Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஒருங்கிணைப்பு (integration )

ஒருங்கிணைப்பு (integration ) ;  உலகமயமாக்கலின் செயற்பாடுகள் இயல்பூக்கம் பெற்றிருக்கும் சமகாலத்தில், மேற்குல நாடுகளின் ராஜரீகச் செயற்பாடுகளிலும், பேச்சுக்களிலும், முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு சொல்லாடலிது. 

இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு (Ethnic integration ) எனும் நோக்கத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடுகளுக்காக, மேற்குல அரசுகள் பெரிதும் அக்கறை கொள்வதனையும், பொருளியற் செலவினங்களை மேற்கொள்வதனையும் அவதானிக்க முடிக்கிறது. ஆனால் அவற்றிற்கான பயன்கள் முழுமையாகக் கிடைக்கின்றதா எனும் கேள்வி எல்லாத் தளங்களிலும் எழுந்தேயிருக்கின்றன. அதற்கான பதிலும் ஆகக் கூடிய திருப்தியை அளிக்கவில்லை என்றே உணரத் தோன்றுகின்றது.

-----------------------------------------------------------------------------------------------------

நோர்வேயில் நடைபெற்றிருந்த  பல்சமூக இளைய தலைமுறையினரது கலைநிகழ்வில்,  தமிழ்ப் பிள்ளைகளுட்பட பல்லின இளையவர்களும் இனைந்திருந்த நிகழ்வொன்றின் கானொலி ஒன்றினைக் காணமுடிந்தது.  அங்குள்ள இளம் தமிழ்கலைஞர்களுட்பட பல்லினம் சார்ந்த இளங்கலைஞர்கள் பலரும் பங்குகொண்ட, மிக அழகான அரங்காற்றுகையாக அது அமைந்திருந்தது.

நோர்வேயில் இவ்வாறான பல்சமூகநிகழ்வுகள் இடம்பெறுவதையும், அவற்றில் பல தமிழ்ப்பிள்ளைகள் கலந்து கொள்வதையும் முன்னரும் அவதானித்திருக்கின்றேன். இவ்வாறான கலைநிகழ்வுகள் மேற்குலகின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றும் வருகின்றன.

சென்றவாரம் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்வில் இணைந்திருந்த போது, ஒரு நடன நிகழ்வுக்கான அறிவிப்புச் செய்யப்பட்டதும்,  அவையினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அந்த ஆர்பரிப்புக்கான காரணம், அந்த நடனத்தில் இணைந்து கொண்ட இரு வெள்ளையின இளைஞர்கள்.  தமிழ்சினிமாப்பாடல்களின் கலவையில் உருவான ஒரு நடனமது.

அதில் அவர்கள் தங்களது தமிழ் நண்பர்களுடன் இனைந்து சிறப்பாக ஈடுபடுத்திக்கொண்டமைக்குத்தான் மக்கள் ஆர்ப்பரித்தார்கள் என்றே நான் எண்ணினேன்.  இதிலென்ன சிறப்பு, இப்போது தமிழ்படங்களில் இடம்பெறும் வெளிநாட்டுப் பாடல்காட்சிகள் பலவற்றிலும், வெள்ளையின நடனக் கலைஞர்கள் பங்குகொள்கின்றார்கள் தானே என்று  எண்ணிய போது, அருகிருந்த நண்பர் " இந்த இரண்டு பெடியன்களும்.  வெள்ளை நிறத்தில பிறந்த தமிழ்ப்பெடியள்.." எனத் தொடங்கினார்.

"எங்கட பெடியளோடதான் சிநேகிதம்.  எங்களப் போல நல்லா உறைப்புச் சாப்பிடுவாங்கள். எங்களப்போலவே கையால குழைத்தும் சாப்பிடுவாங்கள். எங்கட ஆட்களின்ர விழாக்களுக்கு வந்தா எங்கட பெடியளோட சேர்ந்து எல்லா வேலைகளும் செய்வாங்கள்....."  என்று அவர்களைப் பற்றி அடுக்கிக் கொண்டே போனார். அப்போதுதான் புரிந்தது அந்த அவையின் ஆர்பரிப்பு அவர்களது நடனத்திற்கு மட்டுமானதல்ல என்பது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

 இப் பத்தியின் தொடக்கத்திற்கு மீள்வருவோம்.

 ஒருங்கிணைப்பு விடயத்தில் அரசுகளின் செயற்பாடுகள்,  பெருமளவு வெற்றியளிக்கவில்லை என்ற குறைபாட்டினை சந்திப்புக்களில்,  அதிகாரிகள் வெளிப்படுத்துவதை பலமுறை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அவ்வாறான முயற்சிகள் ஏதுமின்றி இவ்வாறான  செயல் விளைவுகளில் எல்லோரும் இயல்பாக இணைந்து கொள்கின்றார்களே. அது ஏன்?.. எப்படி?...

ஏனெனில் அரசுகள் மேற்கொள்ளும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் உள்நோக்கம் மிக்கவை.  அரச செயற்பாடுகளுக்கான தேவையினடிப்படையில் வலிந்து மேற்கொள்ளப்படுபவை.  அஃதன்றிய இவ்வாறான ஒருங்கிணைப்புக்கள் சுதந்திரமானவை... உள்நோக்கமற்றவை என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு என்பது,  உறவாடலின் தொடர்ச்சி. அது வெறும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி அல்ல என்பதை மக்கள் உணர்ந்தேயுள்ளார்கள். அரசுகள் புரிந்து கொள்ளவேண்டும். இது மேற்குலகுக்கும் பொருந்தும். எங்கள் தேசங்களிற்கும் ஏற்பாகும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்


comments powered by Disqus