Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

அல்ப்ஸைக் குடைந்து...

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை, சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் ட்ரான்ஸ் போக்குவரத்துப் பாதையில் அமையும் 57 கீலோ மீற்றர்கள் நீளமான சென் கொத்தார்டோ ( San Gottardo ) சுரங்கத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும், அல்ப்ட்றான்ஸ் பாதை அமைப்புப்  பணித் திட்டத்தின் கீழ்வரும் முதலாவது நீள்சுரங்கம்,  இந்த ஆண்டிலும்,  இரண்டாவது சுரங்கம் 2019லும் திறந்து வைக்கப்படவுள்ளது.

முதற்கட்டப் பணிகள் நிறைவு பெற்றதுமே, சுவிற்சர்லாந்தின் வர்த்தக மையநகரான சூரிச்சிலிருந்து,  இத்தாலியின் வர்த்தக மையப் பெருநகரான மிலானுக்கு இரண்டரை மணிநேரத்தில் தொடரூந்தினூடு பயணிக்க முடியும்.

இந்தப் பயணப்பாதையின் வேக விரிவும், நேரச் சுருக்கமும், ஐரோப்பிய வர்த்தகத் தொடர்பாடலில் முக்கியமானதாக அமையும்.  இத்தாலியை ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய தரைவழிப்பாதையாகிய E35 (A2) வேகவீதிப் பெருஞ்சாலை சுவிற்சர்லாந்தினை ஊடறுத்துச் செல்கிறது.  மலைப்பாங்கான பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்லும் இந்த இரட்டைத்தட வேகவீதியில் ஏற்கனவே அமைந்துள்ள சென் கோத்தார்டோ சுரங்கப் பாதையில் ஏற்படும் வாகன நெரிசல், இச்சாலைப் போக்குவரத்தில் காணப்படும் பெரும் இடர்பாடாகும்.

இந்த இடர்பாட்டினைக் களையும் நோக்கில் உருவானதே அல்ப்ஸ்ட்றான்ஸ் தொடருந்துப் பாதைத்திட்டம்.  சுவிற்சர்லாந்தினை ஊடறுத்துத் தொடரும் அஸ்ப்ஸ் மலைத்தொடரின் உச்சியிலிருந்து 2500 மீற்றர் ஆழத்தில் மலையைக் குடைந்து உருவாக்கபட்டுள்ள 57 கிலோ மீற்றர்கள் நீளமான இந்த இருவழிச் சுரங்கப்பாதை இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

வருடமொன்றுக்கு 37 கோடி தொன் பார ஊர்த்திகள் பயணிக்கத் தக்க இச்சாலையினை, வளரும் மலைத்தொடர் எனக் கணிப்பிடப்பட்டிருக்கும், அஸ்ப்ஸின் அசைவுறு நிலைக்கேற்ப,  சுரங்கப்பாதையின் உறுதி நிலைக்கான கட்டுமானத்தினை பலப்படுத்துவதிலும்,  பாதுகாப்புக்கான காரணிகளை ஏற்படுத்துவதிலும், புதிய தொழில்நுட்பம் கொண்டு செயற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் இத் திட்டத்தின் பொறியிலாளர்கள்.

ஒவ்வொரு 350 மீற்றர் தூரத்திலும் தானியங்கி புகை உறிஞ்சு காற்றாடிகள், அவற்றை இணைத்து மலைக்கு வெளியே தள்ளும் நான்கு காற்று வழிப்பாதைகள்,   25 மீற்றர்கள் இடைவெளியில் அவசர உதவி மற்றும் இணைப்புப் பாதைகள்,  24 மணிநேரத் தொடர்  கண்காணிப்புக் கமெராக்கள், எனப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டமைந்துள்ளது இச் சுரங்கப்பாதை.

இச் சுரங்கப்பாதையினைக் குடைந்தபோது  கிடைத்த கற்களை தொடரூந்துப் பொதி வண்டிகளில் ஏற்றி வரிசைப்படுத்தினால், அது சூரிச்சிலிருந்து சிக்காக்கோ வரை நீளக் கூடியதாம். ஐந்து பிரமிட்டுக்களின் கொள்ளவைக் கொண்ட இக் கற்குவியல்களில் இரு பகுதிகளைக் கொண்டே உள் கட்டுமானத்தினையும், சாலையமைப்பையும் செய்திருக்கிறார்கள்.  மிகுதி மூன்று பகுதியினை சுரங்கத்தின் வெளிப்புறப் பாதை உருவாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இத்திட்ட நிறைவேற்றலுக்காக சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்புப் பிரகாரம் 1992 லும், 1998லும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான அங்கீகாரத்தை வாக்கெடுப்பின் மூலம் இறுதியாக மக்கள் வழங்கியிருந்தாலும்,  புராதன நகரமைப்புக்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு மக்களிடமிருந்தும், சமூக அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பவும் செய்தன.  இதனைச் சமரசம் செய்யும் வகையில் சில தற்காலிக மீளப்புக்களைச் செய்து தரவேண்டி இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

2016ல் இப் பயணப்பாதை செயற்படத் தொடங்கையில், உலகின் நீண்ட தொடரூந்துச் சுரங்கப்பாதையெனும் சிறப்பினையும் தாண்டி, ஐரோப்பாவின் வர்த்தக, பொருளாதாரச் செயற்பாடுகளில்  பாரிய மாற்றத்தினை அது ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

படங்கள் : நன்றி AlpTransit Gotthard

 

comments powered by Disqus