Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

மலேசியாவில் மகிழச் செய்த தமிழ்க்கல்வியும் தமிழ் ஆசானும்!

«தமிழுக்கு அமுதென்று பேர். அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! »

மேற்கண்ட பாடல் அனைவரையும் கவர்ந்ததுதான் என்றாலும், சிறு குழந்தைகளும் இந்த பாடலைப் பாடும்போது நமது மெய் சிலிர்க்கிறது. நமது மெய் சிலிர்க்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த பாடலைப் பாடியது தமிழ்நாட்டு தமிழ் குழந்தைகள் அல்ல. மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளி ஒன்றில் தமிழ் குழந்தைகள் பாடிய பாடல்.

 இப்போது சொல்லுங்கள் இந்த பாடலை அந்த பிஞ்சு மழலைகள் பாடும்போது மெய் சிலிர்க்காதா? அவர்கள் சினிமா பாடல் என்று மலிவாகத் தரம் பிரித்துப் பார்ப்பதில்லை. கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி என்று நமது திரைத் துறை கவிஞர்கள் பாடிய நல்ல பாடலைப் பாடி குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே, தூங்காதே தம்பி தூங்காதே..இப்படி அவர்கள் பிஞ்சு மொழியில் பாடுவதைக் கேட்க நமது மனம் ஆனந்தத்தில் திளைக்கிறது. இப்படியும் நமது தாய் மொழியான தமிழ் மொழியை வெளிநாடுகளில் வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள் எனும்போது அவர்களைப் பாராட்ட வேண்டாமா?

சரி அதெல்லாம் இருக்கட்டும், தமிழைப் பற்றிப் பேசியாயிற்று, அதே தமிழை முதல் பெயராகவும், செல்வியை இரண்டாவது பெயராகவும் கொண்டுள்ள மலேசியாவின் அரசு தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக இருக்கும் தமிழ் செல்வியைப் பற்றிப் பேசாவிட்டால் எப்படி? நாம் பேசுவதை விட அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

''இன்னும் 8 வருடத்தில் நான் ய்வு பெற்று விடுவேன் என்றாலும் இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அனைத்து நாடுகளிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படி இங்கும் தமிழக ஏழைகள் தங்களது குழந்தைகளைப் படிக்கக் வைக்கக் வழியின்றி தவிக்கும்போது அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருந்து அவர்களது குழந்தைகளை எங்களது பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம்.

வழிக்காட்டியாக இருக்கிறேன் எனும்போது அவர்கள் தாய் தந்தை பிழைப்பதற்கு ஏதாவது வழிமுறைகள் சொல்லுவோம். அவர்களுக்கு குழந்தைகளைப் படிக்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கவுன்சிலிங் தருகிறோம். நான் தலைமை ஆசிரியருக்கு அடுத்த பதவியான உதவி தலைமை ஆசிரியர் பணியில் இருக்கிறேன். ஒரு நாளும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று யாரிடமும் கடிந்துக் கொள்வதில்லை. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும்பிடிக்கும்.முதலில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு நண்பராகி விடுவேன்.

பின்னர் அவர்கள் தினமும் அழாமல் பள்ளிக்கு வருவார்கள். இந்த பொம்மைக் கொடுப்பது என்பது கிட்டத் தட்டத் ஒரு வாரம் கூடத் தொடரும். இதுதான் குழந்தைகளை நான் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க கையாளும் யுக்தி." என்று கூறும் தமிழ்செல்வி மீது நமக்கு மட்டும் மரியாதை வரவில்லை, அங்கு பணிப்பார்க்கும் பணியாளர்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். பள்ளியில்தோட்டக்கலையை உருவாக்குவது, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைப் புதிதுபுதிதாக கொண்டு வந்து இறக்குவது என்று குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதில் இவரின் பங்களிப்பு அபாராம். அது மட்டுமா, குழந்தைகளின் பிறந்த நாளை ஏழைக் குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்று எத்தனை ஏக்கத்தோடு இருப்பார்கள், அத்தனை ஏக்கத்தையும் போக்கி, குழந்தைகளுக்கு பிறந்த நாள் என்றால் முதலில் கரும்பலகையில் ஒரு இனிமையான கவிதை இருக்கும், அதை எழுதுவதும் ஆசிரியை தமிழ்செல்விதான். இவரின் பேச்சில் அன்பு ஒழுகும். இவரிடம் பழகுவதில் புதிய புதிய தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

இவரைப் பற்றி இப்படிப் புகழ்வது ஏன் என்கிற கேள்விகூட சிலருக்கு எழலாம், ஆனால் அயல் நாட்டில் இருந்துக்கொண்டு தமிழ் ஆசிரியர் வேலையை செவ்வனே பார்ப்பதோடு, உலக இந்து சங்கம், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வீட்டில் தமிழை வளர்க்க விடுமுறைநாட்களில் தமிழைப் பயிற்றுவித்து அதன் மூலம் அவர்களுக்கு சான்றிதழ் அளிப்பது என்று இத்துனை பணிகளையும் செய்யும் தமிழ் செல்வியைப் பாராட்டினால் என்ன தவறு?

இவர்களது தொடக்கப்பள்ளி சென்று பார்த்தபோது அங்கு நம்மை வரவேற்ற திருவள்ளுவர் சிலை மெய் சிலிர்க்க வைத்து. தோட்டக்கலை மனதை மயக்கியது, பள்ளிகளின் வகுப்பறையில் வகுப்புக்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் அட அட என்னவென்று புகழ்வது. முல்லை முதலாம் வகுப்பு, ரோஜா முதலாம் வகுப்பு, தாமரை முதலாம் வகுப்பு, அல்லி முதலாம் வகுப்பு என்று வைக்கப்பட்டுள்ள பெயர் 10 வகுப்பு வரை நீடிக்கிறது. நமது ஊர் பள்ளிகளில் வகுப்பு A,B,C,Dஎன்றுதான் இருக்கும். இங்கு ஏன் அப்படி என்று தமில்செல்வியிடம் கேட்டபோது, குழந்தைகளை அப்படித் தரம் பிரிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தீர்க்கமாக சொல்கிறார்.

அதோடு அங்கு பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரும் சமமானவர்கள் என்றும் கூறுகிறார். உங்களது எதிர்கால இலட்சியம் என்ன என்று கேட்டால், குழந்தைகளுக்கு ஒரு அறிய புத்தகத்தை நானும் எனது தங்கை சுகுணாவதியும் தயாரித்து வருகிறோம் என்று கூறுகிறார்.

அந்தப் புத்தகத்தைப் பற்றி விளக்குங்கள் என்று கேட்டபோது, "அ" என்கிற முதல் எழுத்து பின்பு அதனுடன் தொடர்புடைய அம்மா என்கிற வார்த்தை, அதன் பின்னர் «ம்» என்பதுடன் தொடர்புடைய சொல். அதன் பின்னர் «மா» வுடன் தொடர்புடைய மாம்பழம் எனும் வார்த்தை. இப்படி ஒவ்வொரு வார்த்தைகளினதும் ஒவ்வொரு எழுத்துக்களுடனும் தொடர்புடைய சொற்கள் என்று குழந்தைகள் தமிழில் அத்தனை வார்த்தைகளையும் கற்றுக் கொள்ளும்படியான புத்தகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளோம்." என்று கூறுகிறார் தமிழ்செல்வி.

அதுமட்டுமா, தமிழ்செல்வி மலேசியாவின் உலக இந்து சங்கத்திலும் உறுப்பினராக  உள்ளார். அவருடன் அந்த உலக இந்து சங்கம் மலேசியாவுக்குச் சென்றிருந்த போது, ஆஹா அங்கு வந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் நெற்றியில் பட்டைப் போட்டுக்கொண்டு காட்சி தந்தது உண்மையில் தெய்வீகமாக இருந்தது. அந்த சங்கத்தில் நடராஜரை அலங்கரிக்கும் பணிகளை குழந்தைகள் செய்தார்கள், குழந்தைகளுக்கும் இந்துக்களின் பாரம்பரியம், பக்தி இவைகளை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை நெறிமுறை வேண்டும் என்பது அந்த சங்கத்தின் கொள்கையாக உள்ளது. சங்கத்தில் ஆன்மீகப் பெரியவர்களின் சொற்பொழிவு உண்டு. அதே சமயம் பெண் குழந்தைகள் சல்வாரில்தான் வர வேண்டும், பெண்கள் புடவை அலது சல்வாரில் வரலாம். ஒரு ஆண் குழந்தை சங்கு ஊதியது மெய் சிலிர்க்க வைத்தது. உண்மையில் இதுப் போன்றவர்களால் தமிழ் உலகெங்கும் வாழ்கிறது வெற்றிக்கொடி நாட்டுகிறது.

தமிழுக்கு அமுதென்று பெயர் என்று தலைப்பில் சொன்னோம், தமிழ் செல்விக்கு தமிழரசி என்று பட்டம் சூட்டலாமா? தொடரட்டும் இவர் தமிழ் பணி.. வாழ்த்துவோமே.


- 4தமிழ்மீடியாவுக்காக படங்களுடன் எழில்செல்வி

comments powered by Disqus