Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்

தமிழர்களுக்கு பிடித்த ஒரு வார்த்தையெனில் அது ஈழம்தான் .ஈழத்து மக்களுக்குச் சோதனை  என்றால் கலங்கிப் போவதிலும், ஈழத்து மக்களின் சாதனையில் குதுகலித்துப் போவதிலும்,  தொப்புள் கொடி உறவான தமிழகத் தமிழர்களுக்கு நிகர் அவர்களேதான்.

அது போன்ற ஒரு மனமகிழ்வுதான், சமீபத்தில் நடைப்பெற்ற பிரபாலினி ஆடியோ மற்றும் வீடியோ வெளியீட்டு விழாவில் பிரபாலினியை நமது தமிழ் மக்கள் வெகுவாகக் கொண்டாடிப் பாராட்டினார்கள்.

பிரபாலினி கலிஃபோனியாவில் வசிப்பவர். இவரது தந்தை இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷ் ஈழத்து மெல்லிசை மன்னர். இவரது அம்மா சங்கீத பூஷணம் மாலினி பரமேஷ்.புலிக்குப் பிறந்தது எலியாகுமா? (கொஞ்சம் மாற்றி யோசித்தோம்) சின்ன வயதிலேயே அப்பாவின் விருப்பப் படி இசை கற்றுக்கொண்ட பிரபாலினி, இன்று ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர்  என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். நான்கு வயதில் மேடையில் ஏறி பாடிய இவரின் இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது.

பிரபாலினியின் கணவர் பெயர்  பிரபாகரன்,இவரது மனைவியின் அத்தனை முயற்சிக்கும் பெருமளவில் உறுதுணையாக இருப்பவர் இவர்தான். இந்த தம்பதியருக்கு கிரீஸ் மற்றும் கார்த்திக் என இரண்டு குழந்தைகள் உண்டு.பிரபாகரனும் தபேலா வாசிப்பதில் வல்லவாராம்.இலங்கையில்  200க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடிய பிரபாலினிக்கு, 1986ம் வருடம் குடும்பம் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தபோதும் தமது இசைக் கச்சேரிகளைத் தொடரும் வாய்ப்புக் கிடைத்தது. பல நாட்டிலும் பல மேடைகளைக் கண்ட இவருக்குகடைசியாக கியூன்  கோப்ரா என்கிற நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் இசை ஆல்பம் தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்துள்ளது.

இதன் விளைவே 6 ஆடியோ இசை ஆல்பம், இரண்டு வீடியோ ஆல்பம் என்று அமெரிக்காவில் தயாரித்தது. அதில் கியூன்  கோப்ரா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ராஜ நாகத்தை  வைத்து அவர் ஆடிய நடனம் மெய்  சிலிர்க்க வைக்கிறது.அவரை அந்த பாம்பு பலமுறை கடித்து விட்டதாம். ஒரு ஆணை ஹீரோவாக வைத்து தம்மால் நடனமாட முடியாது என்று நினைத்த பிரபாலினி, ஆணுக்கு நிகராக
ராஜநாகத்தை தேர்ந்தெடுத்து நடனமாடி உள்ளார்.

இந்த ஆடியோ அண்ட் வீடியோவை பசமிக்க, நேசமிக்கத் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில்தான் வெளியிட வேண்டும், அதுவும் திரு கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, தந்தையின் அன்புமிக்க, பண்புமிக்க நண்பர்களில் ஒருவரான புலமைப் பித்தன் இவர்கள் முன்னிலையில் நடத்த விருப்பப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சென்னை வடபழனியில் உள்ள RKV பிரிவியூ தியேட்டரில் வெகு விமரிசையாக நடத்தினார்.

நமது கலைஞர்கள் கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, மற்றும் திமுக எம்பியான திருச்சி சிவா பிரபாலினியை மனமாரப் பாராட்டினார்கள்.. ஈரோடு மகேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்..நமது தொப்புள்கொடி உறவுப் பெண் அல்லவா பிரபாலினி..அவர் கலைத்துறையில் நட்சத்திரம் போல ஜொலிக்கட்டுமே..

                                                                                                -4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி படங்கள் சூர்யா


comments powered by Disqus