Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மரியாதை நினைவஞ்சலி!

24-04-2015 வெள்ளிக்கிழமை மாலை நேரப் பொழுதை மறைந்த மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 16 வது நினைவு நாள் என்பதால் இதயம் கனக்கும் மாலை நேரம் என்பதா? இல்லை அன்றைய தினம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாள் என்பதால் ஆறுதலான மாலை நேரம் என்பதா? இல்லை கொளுத்தும் கோடையில் நல்ல மழை பெய்ததால் இயற்கை ஜெயகாந்தனுக்கு செலுத்திய கண்ணீர் அஞ்சலி மாலை என்பதா?

மேற் சொன்னபடி ஒரு வார்த்தைக் கோர்வைக்குள் அடக்க முடியாத மாலைப் பொழுதாகத்தான் அன்றைய மாலைப் பொழுது இருந்தது, காரணம் ஒரு வார்த்தைக்குள் பாராட்டிவிடக்கூடிய எழுத்தாளரா திரு ஜெயகாந்தன்?.  அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்பிவிட முடியாதபடி ரஷ்ய கலாச்சார மையத்தில் அவரது நினைவுகள் நிறைந்திருந்தது.அந்தக் கட்டிடம் அங்கு நிலைக்க அவர் காரணமாக இருந்தார் என்பதால்..அவரது வாழ்க்கையில் பெரும்பகுதி ரஷ்ய கலாச்சாரத்தோடு கழிந்தது என்பது உண்மை என்பதால்... ரஷ்ய கலாச்சார மையத்தில் அவரது புகைப்படக் காட்சி மற்றும் அவரது புத்தகங்கள் நிறைந்திருந்தது என்பதால்..அன்று அவரது
16 வது நினைவஞ்சலி நாள் மற்றும் 82 வது பிறந்தநாளும் என்பதால்,   நீக்கமற அவர் நம்மோடு இணைந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அவைத் தலைவரும், எழுத்தாளரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான டாக்டர் எம்.நடராஜன்  நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அன்று ஜெயகாந்தனின்  82வது பிறந்தநாள் என்பது அத்தருணத்தை மேலும் நெகிழ்வாக்கியது. நிகழ்ச்சி ஜெயகாந்தன் குறித்த ஆவணப் படத்தோடு தொடங்கியது. அந்த ஆவணப் படத்தில் ஜெயகாந்தன் அவ்வப்போது நிகழ்த்தியஉரைகளின் தொகுப்பு, அவர் வாங்கிய விருதுகளின் தொகுப்பு, அவரைப் பற்றிய முக்கியமானவர்களின் நினைவுகள் என்று பகிந்துக்கொள்ளப்பட்டு இருந்தது.

மறைந்த எழுத்தாளர் என்று மனம் கனத்தாலும் அந்த மாலை நேரத்தில் ஆவணப்படம் மனதுக்கு இதமாக இருந்தது. ஜெயகாந்தன் என்கிற பெயருக்கு மிடுக்கு என்று பொருளோ என்று வியக்கும்படி அவரது மிடுக்கான நடையும், துணிச்சல் மிகுந்த எடுப்பான பேச்சும்..அட அட...உன்னைப்போல ஒருவன் என்கிற அவரது கதையின் தலைப்புக்கு ஏற்றாற்போன்று அவரைப்போல ஒருவன் இனி பிறந்தால்தான் உண்டு. இப்போது அவருக்கு நிகர் அவரே!

ஜெயகாந்தன் அவர்களின் 16வது நாள் நினைவாஞ்சலி மற்றும் அவரது பிறந்தநாள் விழா,குத்து  விளக்கேற்றி அவரின் படத்துக்கு மலர்தூவி மரியாதையுடன் தொடங்கியது.

ஜெயகாந்தனின் திண்ணைப்பள்ளி நண்பர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாம் முருகேசன் என்கிற சிறுவனாக இருந்தபோதே சாரங்கபாணி என்கிற ஜெயகாந்தனைத் தெரியும் என்று ஆரம்பித்தார். இருவரும் இரு வேறு துருவங்களாக கொள்கையில் இருந்தாலும், அந்தக் கொள்கையை நட்பில் புகுத்தாமல் இருந்ததால் கடைசிவரை நட்பு தொடர்ந்தது என்று நெகிழ்வுடன் பேசினார்.ஜெயகாந்தனை அறிவு நாணயம் என்கிற  தாத்பரியத்தைக் கடைப்பிடித்தவர், எதற்காகவும் தமது எழுத்துலக கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் என்று பேசினார்.ரஷ்ய இந்திய கலாச்சார உறவுக்குப் பாலமாக விளங்கிய ஜெயகாந்தன் அவர்கள் அணுமின் நிலையம் குறித்துக் கருத்துக்
கூறுகையில், விஞ்ஞானத்தில் ஒருமுறை நேர்ந்த தவறு மறுமுறை ஏற்படாது என்று அழுத்தமாக தமது கருத்தைப் பதிவு செய்த தீர்க்கதரிசி என்று புகழ்ந்து பேசினார்கள்.

ஹிந்து பத்திரிகை ஆசிரியர் ராம் கூறுகையில், கி.வீரமணி அவர்களும், ஜெயகாந்தன் அவர்களும் வேறு வேறு பாதையில் பயணித்தவர்கள் என்றாலும்,நட்பில் ஒரே பாதையில் சென்றது என்பது ஆச்சரியம் அளிப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் என்றால் துணிவு, நேர்மை என்பதோடு அவரது எழுத்துக்கள் தரமும் தினித்துவம் பெற்று இருக்கும் என்று பேசினார்.

ஜெயகாந்தனின் சில நாவல்கள் அவராலேயே  படமாக்கப்பட்டும் இருந்துள்ளன. சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான், உன்னைப்போல் ஒருவன் என்பன உள்ளிட்ட அறிய நாவல்கள் அவை. இந்த படங்களின் எடிட்டர் லெனின் பல அறிய கருத்துக்களை  பகிர்ந்துக்கொண்டார். ஜெயகாந்தனின் உருவத்திலும் ஒப்பனையில்லை, அவரது  படைப்புக்களிலும் ஒப்பனையில்லை என்பதால் அவர்
சினிமாக்காரர்களில் இருந்து வேறுபட்டு அன்றே மாற்று  சினிமாவை எடுத்து வெற்றிக்கண்டவர் என்பதை இன்று மாற்று சினிமா எடுக்கிறோம் என்று கூறிக்கொள்பவர்கள் உணர வேண்டும்.

நிகழ்ச்சியில் நீதியரசர் கே.என்.பாஷா,ரஷ்ய கலாச்சார மைய பிரிசிடெண்ட் ஆர்.வீரமணி,நிர்வாக இயக்குனர் வி.எம்.லக்ஷ்மி  நாராயணன், செகரட்டரி பி.தங்கப்பன் ஆகியவர்களின் ஜெயகாந்தனுடனான சுவைமிகு அனுபவ உரைகளை ஒரு புத்தகமாகவே தொகுத்து வழங்கலாம். ஒருமுறை ஜெயகாந்தனிடம் கி.வீரமணி கேட்டாராம், ''இன்றும்  உங்களுக்கு சாரதி தங்கப்பன்தானா'' என்று,
ஜெயகாந்தன் அவர்கள் சட்டென்று  பதில் உரைத்தாராம் ''அப்பாடியானால் நீங்கள் மகாபாரதத்தை நம்புகிறீர்கள்'' என்று. இப்படி  ஜெயகாந்தனின் சமயோசித புத்திக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை சுவைபட  கூறினார்கள் பலரும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு நடராஜன் அவர்கள் பேசுகையில், ஜெயகாந்தன் ஒருமுறை தஞ்சை வந்திருந்த போது, தங்களது  இல்லத்து அயிரமீன் குழம்பு வேண்டும் என்று கேட்டு ருசித்து சாப்பிட்டதை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தாராம் அதை நினைவு கூர்ந்தார் நடராஜன் அவர்கள்.

எழுத்தாளர் சங்கத்தின் அவைத் தலைவர் திரு.நடராசன் ஜெயகாந்தன் பற்றிய சின்ன  சின்ன குறிப்புக்களைக் கூறியது நன்றாக இருந்தது. அதற்குத் தகுதியானவரும் அவர்தானே. இதோ அவர்  எடுத்துரைத்த குறிப்புக்கள்-

கடலூரில்  உள்ள மஞ்சக் குப்பத்தில் பிறந்த ஜெயகாந்தன் கீழ்த்தட்டு மக்களோடு  பழகியவர். தன்னுடைய முன்னேற்றத்துக்கு தானே உழைத்த அவர், அண்ணா எழுதிய ஓரிரவு படத்தின் பாட்டுப் புத்தகத்தை விற்பதையும் தொழிலாக செய்துள்ளார்.

கம்யுனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் அபிமானம் கொண்டிருந்த இவருக்கு துணிச்சலான விமர்சன பார்வையும் இருந்ததற்கு உதாரணமாக தந்தை பெரியாரை மேடையிலேயே கடுமையாக விமர்சித்ததை  உதாரணமாகக் கூறலாம்.

முதலில் சரஸ்வதி, சமரன் என்கிற  இலக்கியப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர், என்றும் எப்போதும் பத்திரிகைகளுக்கு ஏற்றபடி தமது எழுத்துக்களை மாற்றிக் கொண்டதில்லை.

ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஒரு பிடி சோறு. ஜெயகாந்தனின் படைப்புக்களில் அவர் எழுதும் முன்னுரைகள் கூட வெகு சுவாரஷ்யமானவை. அதை தனி நூலாக பதிப்பகத்தார் போட்ட பெருமை ஜெயகாந்தனை மட்டுமே சாரும்.

ஜெயகாந்தன் திரைப்பட உலகிலும் கதாசிரியராக, பாடலாசிரியராக, வசன கர்த்தாவாக,இயக்குனராக பரிமளித்து  இருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் என்கிற தமது நாவலை இயக்கியவரும் அவரே.

17 நாவல்கள்,13 சிறுகதைத் தொகுப்புக்கள்,25 கட்டுரைத் தொகுப்புக்கள் என்று இவர் எழுதியுள்ளார்.அத்தனையும் உக்ரைன் மொழி உட்பட பல மொழிகளில் மொழிப்  பெயர்க்கப்பட்டு உள்ளன.

ஞான பீட விருது,சாகித்ய அகதமி விருது,பத்ம பூஷன் விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த இவர்  தம்மை புதுமைப் பித்தன் வாரிசு என்று சொல்லிக் கொள்வார்.எனவே, எழுத்தின் மீதுள்ள மரியாதை காரணமாக குறிப்பிட்ட காலக் கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

மேடைகளில் இவர் முதல் நாள்  பேசினால், மறுநாள் அது சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் ஐயமில்லை, அத்தனைத் துணிச்சல் அந்த பேச்சில் இருக்கும்.காமராஜர் போன்ற பெரும் தலைவர்கள் கூட உதவி செய்யக் காத்திருந்தும் யாரிடமும் உதவி நாடியதில்லை.

நான் தமிழன்.தமிழன் அல்லாத இன்னொருவன் அல்லன்.என் மொழி தமிழ். தமிழ் அல்லாத இன்னொன்று அல்ல என்று பெருமையுடன் கூறிக் கொண்டவர் ஜெயகாந்தன்.

செத்தாருக்கு அழுவதே நமது மரபாகிவிட்டது.அழுகிற மரபினைச் சேர்ந்த ஒருவனாக மாறுவதில் நான் வெட்கமடைகிறேன்.எல்லோருமே ஏதோ ஒரு வரிசைக் கிரமத்திலே இந்த உலகத்துக்கு வந்திருக்கிறோம்.அந்த வரிசைக் கிரமத்திற்கு முற்றிலும் புறம்பான வரிசையிலே நாம் எல்லோரும் இங்கிருந்து போயும் விடுவோம்.

வாழ்வதன் முன்னமே செத்திருந்தேன், செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன் என்கிற ஜெயகாந்தனின் கூற்றுக்கு ஏற்ப, கண்ணீர் அஞ்சலி செலுத்தாமல் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம் என்று தமது உரையை எம்.நடராஜன் முடித்தார்.

மாலை நேரம் முடிந்து இரவு நேரமாகியும் வானம் பூ மழையாய் தூறிக்கொண்டே இருந்தது. அது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கான இயற்கையின் தூய்மையான கண்ணீர் அஞ்சலி போலும் !


- 4தமிழ்மீடியாவுக்காக: எழில்செல்வி, படங்கள் சூர்யா


comments powered by Disqus