Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

How Old Are You: கனவுகளுக்கு வயது தடையில்லை!

கடவுள் தேசத்து திரைப்படங்கள் சிலவற்றை அண்மைய நாட்களில் தொடர்ச்சியாகப் பார்க்க முடித்தது. அவற்றில் த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ், ஹவ் ஓல்ட் ஆர் யூ உள்ளிட்ட மூன்று படங்களும் வேறு வேறு தளங்களில் பயணிக்கும் அழகான சினிமாக்கள். 

காதலும், கனவும் இல்லாத மனித வாழ்க்கை எப்படி சாத்தியமில்லையோ, அதுபோலத்தான் சினிமாவும் சாத்தியமே இல்லை. ஆனால், அதை எவ்வாறு திரைக்கதையாக முன்வைக்கிறார்கள் என்பதுதானே படமொன்றின் வெற்றியையும், அதன் தரத்தினையும் தீர்மானிக்கின்றது.

மிக எளிய ஒரு வரிக் கதைகளை வைத்துக் கொண்டு அற்புதமான திரைக்கதைகளினால் கட்டிப் போட்ட படங்களாக குறித்த படங்களைச் சொல்ல முடியும்.

அதிலும், நீண்ட விடுப்புக்குப் பின் நடிப்பு பிரவேசம் செய்திருக்கின்ற மஞ்சு வாரியரின் நடிப்பில் வெளிவந்திருக்கின்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ ஒவ்வொருவரும் தமது அடையாளங்களுக்காக போராடுவது தொடர்பில் போதிக்கின்றது.

ஆனால், அது, அறுவையான போதனையாக இல்லாமல், மாணவர்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்துக் கொண்டு சிரிக்க வைத்து எளிய வடிவில் கற்பிக்கும் ஆசிரியரின் போதனையாக இருக்கின்றது. அதுதான், அந்தப் படத்தின் முதல் வெற்றி.

எமது சமூகத்தில் குடும்பத் தலைவிகள்(!) ஆகிவிட்ட பெரும்பான்மையான பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதற்கான சாட்சியே கதையின் நாயகியான நிருபமா கிருஷ்ணன் (மஞ்சு வாரியர்).

தன்னுடைய கனவுகளையும், இலக்குகளையும் மறந்துவிட்டு கணவன், குழந்தை என்று தன்னுடைய எல்லைகளைக் குறுக்கி விட்டவள். அதனாலேயே, சரியான மரியாதை தராத கணவனும், அம்மாவினால் எதுவுமே சாதிக்க முடியாது என்று கொள்ளும் குழந்தையுமாக உருமாறி நிற்கின்றது நிருபமா கிருஷ்ணனின் வாழ்க்கை.

அது கொடுக்கும் வலியும், வேதனையும் மெல்ல மெல்ல அவளுடைய வாழ்க்கையை எவ்வாறு நட்டாற்றில் விடுகின்றது என்பதும், அதன் பின்னால், அவள் தன்னுடைய அடையாளத்தைத் தேட ஆரம்பிப்பதும் தான் ஹவ் ஓல்ட் ஆர் யூ.

குடும்ப வாழ்க்கை என்பது பெண்களின் கனவுகளையே அதிகம் சீர்குலைக்கின்றது. அது, குழந்தை, கணவன் என்கிற கடமை(!)களின் முன்னால் சிதைந்து போகின்றது. ஒரு கட்டத்திற்கு மேல், தங்களின் கனவுகள் தொடர்பிலுயே அவர்கள் மறந்து போகிறார்கள்.

ஆனால், ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் அப்படியில்லை. அதற்கு, அவர்களுக்கு கடமைகள் அல்லது பொறுப்புக்களின் அழுத்தம் பெண்கள் அளவுக்கு இல்லாமற் இருப்பது காரணம். இது, தொன்றுதொட்டு கட்டமைக்கப்பட்ட மோசமான பக்கம். அதாவது வெளிப்படையான மொழில் சொல்வதானால் ஆணாதிக்க சமூகத்தின் நீட்சி என்று கொள்ளலாம்.

கல்யாணத்துக்கு முன்னைய பெண்களிடம் இருக்கும் கனவும், அவற்றை அடைவதற்கான உழைப்பும் பெரியதாகவே இருக்கும். அந்த வேகத்தில் பயணித்திருந்தால் அவர்களின் இலக்குகள் இலகுவானவைதான். ஆனால், அதுதான் அதிகம் நடப்பதில்லையே.

குடும்பமும், பொறுப்பும், கடமைகளும் வந்தாலும் கனவுகளைத் துரத்திச் செல்வதை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். ஏனெனில், பிள்ளைகளின் முன்மாதிரியாக தாயைக் கொள்வது என்பது பெரும் பாக்கியம். அது, பெருமிதமும் கூட.

அதைவிடுத்து, இலக்குகள், கனவுகள் தொடர்பில் அக்கறையின்றி இருந்து மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பெருமூச்சு விடுவது, பொறாமை என்கிற தீயை வயிற்றுக்குள் எரிய விட்டுவிடும். அது, இயலாமை என்கிற பெரும் சாபத்தை வாழ்க்கை பூராவும் சுமக்க வைக்கும். அது, என்றைக்கும் நல்லதல்ல. அது, சுற்றியிருப்பவர்களையும் இம்சித்துவிடும். இது, அனைவருக்கும் பொருந்தும்.

யாராக இருந்தாலும், இலக்குகளை அடைவதற்கான பயணத்தை நிறுத்தக் கூடாது. எல்லா இலக்குகளும் அவ்வளவு இலகுவானவை அல்ல. ஆனால், அதற்கான உழைப்புக் கொடுக்கும் மகிழ்வே வாழ்வின் பெரும் வரம். அதன் பின்னர் வெற்றியும், தோல்வியும் அனுபவம் மாத்திரமே. இலக்குகளும், கனவுகளும் இல்லாத மனிதன் இந்த உலகத்துக்கு தேவையற்றவன் என்பது என்னுடைய வாதம்.

நிருபமா கிருஷ்ணனும் தன்னுடைய கனவுகளை விரட்ட ஆரம்பிக்கின்றாள். வெற்றி பெறுகின்றாள். இதுதான் ஹவ் ஓல்ட் ஆர் யூவின் முடிவு. ஆனால், நிருபமா கிருஷ்ணன் எனும் இளம் குடும்பத் தலைவியாக மஞ்சு வாரியர் நடிப்பில் இயல்பாக கொள்ளை கொள்கிறார். அதுவும், ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்று தான் மயங்கி விழுந்த கதையை தன்னுடைய தோழியிடம் விபரிக்கும் போதும், பேஸ்புக் மேதைகளுக்கு விளக்கும் போதும் கலக்கியிருக்கின்றார்.

இயக்குனர் Rosshan Andrrews, திரைக்கதையாளர்கள் Bobby- Sanjay உள்ளிட்டவர்கள் மஞ்சு வாரியரின் மீள்வருகையை சரியாக கையாண்டிருக்கிறார்கள். அதுதான், ஹவ் ஓல்ட் ஆர் யூவின் வெற்றியில் வெளிப்பட்டிருக்கின்றது.

ஹவ் ஓல்ட் ஆர் யூ பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றியது, குடும்பத் தலைவி என்கிற நிலை அற்புதமான நடிகையான மஞ்சு வாரியரையும் 15 ஆண்டுகள் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி வைத்திருத்தந்ததோ என்று? அது என்னுடைய பிழையைான எண்ணமாகவும் இருக்கலாம். அதுபோக, அவரின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால், மஞ்சுவின் கனவுகளையும் குடும்ப பொறுப்பு(!) அல்லது கடமை(!) என்ற சமூகத்தின் முன்மொழிவுகள் தடுத்தாண்டிருந்தால் அது மிகமோசமான ஒன்றாகவே கொள்ள முடியும்.

இறுதியாக, குடும்பமும், அது கொடுக்கும் பொறுப்பும் ஆண்களையோ, பெண்களையோ முடக்கிப் போட்டுவிடக் கூடாது. குடும்ப வாழ்க்கை அனைவருக்கம் கனவுகளைத் துரத்துவதற்கான உந்துதல்களை வழங்கும் சூழல் உருவாக வேண்டும். அதுபோல, வயது என்றைக்கும் கனவுகளுக்கான தடையில்லை… விரைந்து ஓடுங்கள்!

- 4தமிழ்மீடியாவுக்காக: புருஜோத்தமன் தங்கமயில்

comments powered by Disqus