Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

மறக்க இயலா கானங்கள்: " நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா "

என் வாழ்வில் மறக்கவே இயலாத மறற்றுமொரு கானம்தான் இது, அவ்வளவு பசுமையாய் இன்னமும் இப்பாடல் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் இது அறிமுகமான தினம்தான், நான் அப்போது என் கிராமத்து பள்ளியிலிருந்து கோவையின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ பள்ளியில் ஆறாவது சேர்க்கப்பட்டேன். மைக்கேல்ஸ் என்ற புதுப்பள்ளிக்கூடம்.

தினம்தோறும் பேருந்தில் ஏறிவரும் புதுப்பயணங்கள், என்னோடு ஒட்டாத புது நண்பர்கள் என எல்லாமே எனக்கு மிகப்புதியவையாக இருந்த காலத்தில், எனக்கே அந்த ஆறாவது என்பது மிக செயற்கையாகவும், பிடிக்காத ஒன்றாகவும்தான் தோன்றியது. என் இயல்புக்கு ஏற்றவாறு யாருமே அந்தப்பள்ளியில் இல்லாதது போலவும், நான் மட்டும் அந்நியமானது போலவும் தோணும். பள்ளி இடைவேளைகளில் மெளனமாக சென்று அந்த பள்ளியில் இருந்த மாதா சிலை முன்பு அமர்ந்து பார்த்துகொண்டு கண்ணீர் விடுவேன். காரணம் இல்லாமல் சோகமாக இருப்பது என்னமோ எனக்கு இன்றுவரை பிடித்தமான ஒன்று. ஆனாலும் நகரத்தின் சுற்றுபுறம், வேடிக்கை பார்க்க மிக பிடித்தமையாக இருந்ததாலோ என்னவோ நான் என் பெற்றோரிடம் இந்த பள்ளி எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

தலை நிறைய எண்ணை வழிய படிய வாரி நான் வருவதும், என் அண்ணன் படித்த பழைய புக்களை நானும் படிப்பது கண்டு அவர்கள் என்னை ஒதுக்கியே வைத்திருந்தனர். புது கோணார் நூல் உரை, ஜெயகுமார் இங்கிலீஷ் கைடு காசு ஏது?..  என் அண்ணன் படித்து முடித்ததும்,அது என் மாமா பெண்ணுக்கு போகும் (அவர்தான் இப்போது என் அண்ணி ). அதற்கு பிறகு எனக்கு வரும், அதற்க்குப்பிறகு என் சித்தி பெண்ணுக்கு போகும். அடுத்து என் இன்னொரு அத்தை பெண்ணுக்கு போகும், அடுத்ததாக மீண்டும் என் சித்தி பையனுக்கு அது வரும்போது கிழிந்து நார் நாராய் தொங்கும். ஆனாலும் அதுதான் படித்தாகவேண்டும், அதையே நாங்கள்  மாறி மாறி படித்து கொள்வோம்.

நகரப்பள்ளியில் வயதான தமிழ் வாத்தியார் வரதராஜன் அய்யா சொன்ன அச்சு பிச்சு ஜோக்குகேல்லாம் நான் விழுந்து விழுந்து நான் சிரித்தபோது உடன் படித்த மாணவர்கள் எல்லோரும் என்னை மிகவும் வித்தியாசமாக பார்த்தனர். அவர்கள் அப்போதே ஏதோ கிசுகிசு வென்று  பேசுவதும், புத்தகங்களில் ஒளித்து வைத்து கண்ட கண்ட பத்திரிக்கைகளில் வந்த கட்டிங் கவர்ச்சி படங்களை பார்ப்பதுமாக இருப்பர். அதெல்லாம் காட்டினால் நான் “சீ”  என்றெல்லாம் சொல்லி அவர்களை கெட்ட பையன்கள் லிஸ்ட்டில் சேர்த்து பேசுவதே இல்லை. நான் பேசுவதில்லை என்று சொல்வதை விட அவர்கள் என்னுடன் பேசுவதில்லை என்று சொன்னால்  மிக பொருத்தம் ... அப்படி ஒரு உத்தமனாக நானும் இருந்தேன் ஒரு காலத்தில்.

அந்த வெற்று நாட்களில் ஒரு நாள் பள்ளி இடைவேளையின்போது எங்கள் பள்ளியின் ஆடிட்டோரியம் வழியே வரும்போதுதான் பாட்டு சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். உள்ளே ஆறேழு பேர் ஆடுவதும் பாடுவதுமாக இருந்தனர். எப்படி சென்று பேசுவது என்றும் தெரியவில்லை. எங்கள் கிராம பள்ளியில் நானே பாடல் ஆடல் நாயகனாக இருந்ததால் அந்த தாகம் தொக்க தினமும் கலையரங்கத்தின் முன்பு போய் போய் எட்டி பார்ப்பதும் யாராவது பார்த்தல் “ஈ” என்று சிரிப்பதுமாக இருந்தேன். ஒரு மாதம் கழித்து அந்த கும்பலிலேயே இருந்த ஒரு அண்ணா என்னை அழைத்து “தம்பி.. சத்துணவு மாஸ்டர் இருந்தா கொஞ்சம் கூப்பிட்டு வாரியா “ என்று கேட்டார். சரிங்க்ணா!! என்றவன் திரும்பி “அண்ணா.. அவர்கிட்ட போயி உங்க பேரை என்னா னு சொல்றது ? " என்று கேட்டேன் ... “பிரட்ரிக், நைன்த் பி நு  சொல்லுடா” என்றார். அன்று சத்துணவு மாஸ்டர் கூடவே அந்த கலையரகத்தினுள் நுழைந்தவன் பத்தாவது முடியும் வரை அந்த கலையரங்கதின் மிகப்பெரும் அங்கமாய் மாறிப்போனேன். அவ்வளவு பாடல்களும் பரிசுக்களுமாய் வாழ்ந்த  ஒரு அழகிய காலம் அது.

முதன் முதலாய் நான் பாடல் பாடத்தெரியும் என்றுதான் நுழைந்தேன். பிரட்ரிக் அண்ணா கீ போர்டு நன்றாக வாசிப்பார். அவர் என்னை  பாடிகாட்டச்சொன்னதும் நான் “ கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ ?" என்று குழந்தைக்குரலில் பாடிக்காட்டினேன். உடனே அந்த அண்ணா என்னை அவர்கள் குரூப்பில் சேர்த்து கொண்டார். அதன் பிறகு நாங்கள் கோவையில் போகாத பள்ளி இல்லை, ஜெயிக்காத போட்டிகள் இல்லை என்று சொல்லாம். ஹ்ம்ம்ம் ... இன்று  நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நீர் கசியும் நாட்கள் அவை. எங்கள் குரூப்பில் நாங்கள் மெயினாக பாடுவது தவிர்த்து அடுத்தவர்கள் பாடும்போது கோரஸ் பாடுவது வழக்கம். அப்படி பாடுவதற்காக வந்தவன் தான் எங்கள் நண்பன் சொகரப் பாஷா.அவன் நன்றாக ப்ரேக் டான்ஸ் ஆடுவான். வாயிலேயே தும் தும் தும் என்று எல்லா மியூசிக்கையும் போட்டு ஆட்டமா தேரோட்டமா பாடுவான். அதையெல்லாம் நான்  அதிசயமாக பார்த்தபோதுதான் கேட்டான், “என் டான்ஸ் கிளாஸ் வாரியா? “ என்றான்.

அன்று பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் அவனின் டான்ஸ் கிளாஸ் சென்றோம். அங்கு கசகச வென ஒரு பகுதியில் படம் படமாக சினிமா பேனர்கள் வரைந்து வைக்கபட்டிருந்தது. என்னடா இது? என்று கேட்டேன். இங்கதான் கோயமுத்தூர்ல இருக்கற எல்லா தியேட்டருக்கு பேனர் வரைவாங்க, பேரு சினி ஆர்ட்ஸ் என்றவன்  அதன் மைய பகுதிக்கு  கூட்டி சென்றான். சென்றவுடன் மட மடவேன்று ஷூ எல்லாம் கழட்டி, டான்ஸ் மாஸ்டர் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு ஓடிபோய் அந்த கும்பலில் இவனும் நின்று கொண்டான். அங்கேதான் நான் கண்டேன் அந்த அனுபவம். பத்து பதினைந்து பேர் இரண்டு வரிசையில் நின்று “ஸ்டார்ட்” என்றவுடன் டும் டும் டும் டுணட்ங்ட்ங் .. என்று பாடல் அதிர “வஞ்சிரம் வவ்வாலு மீனுதானா .. இது கண்ணியில சிக்காத மானு தானா..”  பாட்டு ஒலிக்க அத்தனை  பேரும் ஒரே மாதிரியாக ஆடியது கண்டபோது நான் அதிசயித்து நின்றேன். அது வெறும் ஒரு நிமிடப்பாட்டு,  அது முடிந்தவுடன் எல்லோரும் என்னனமோ பேசி கொண்டு கலைய இவர்களில் சிலரும், இன்னும் புதிதாக சில பிள்ளைகளும் காலி சலங்கை கட்டிகொண்டு ஜல் ஜல் என்ற சத்தத்தோடு வந்து அங்கிருந்த மாஸ்டரை தொட்டு வணங்கினர்.

எதிர்பாராத "டக் .."கென்று பாடல் ஆரம்பித்தது. "தா தை தகத்தை தை தக் .. தா தை தகத்தை தை தக் ..என்று பாடல் ஆரம்பிக்க இவர்கள் எல்லோரும் பரதநாட்டியம் ஆடியது கண்டு நான் வாய் பிளந்தேன். அவ்வளவு அழகாக அருமையாக ஆடினர். அதுவரை நான் எங்கள் ஊரில் பரதநாட்டியம் என்று கண்டதெல்லாம் சும்மா கை காலை ஆட்டி கொண்டது தான். பரதத்திற்கேன்று இருக்கும் நிஜம் கண்டபோது நான் அப்படியே சொக்கிபோனேன், அந்த அழகான கணத்தில் கேட்ட அந்த பெண்குரல் “நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி “ என்று பாடிய போது மெய் மறந்து போனேன். அடுத்ததாக வந்த அந்த ஆண்குரலும், அதற்கேற்றவாறு இவர்கள் நடனமும், பாட்டின் மெட்டும் என்னை எங்கோ கொண்டு சென்றது. அந்த வயதிலேயே நான் மிக அரிதான பாடல்களை ரசிக்கும் குணம் கொண்டிருந்ததற்கு நான் இன்னமும் பெருமைப் படுகிறேன் .. அன்று ரசித்தவற்றைத்தான் இன்று எழுதுகிறேன்.

நடனம் முடிந்து அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் என் அருகில் வந்த சொகரப் பாஷா, ஏன் .. நீ ஆடமாட்டியா ?
என்று கேட்டான். நான், ஏதோ ஆடுவேன், ஆனா எங்க அம்மாவுக்கு பிடிக்காதே ? என்றேன். ஏன் என்று கேட்டான். அது வந்து ஒரு நாள்  டீவீல ஒளியும் ஒலியும்ல ஆடிவெள்ளி படத்துல வருமே ஒரு பாட்டு, “வண்ண விழியழகி வாசக்குழலழகி” பாட்டுக்கு டீவீயை பாத்துட்டே ஆடும்போது தவறி கீழே விழுந்து அஞ்சி தையல் புருவத்துல போட்டுது. அப்போ இருந்து நான் ஆடினா அம்மாவுக்கு பிடிக்காது!! என்றேன், “அம்மாவுக்கு தெரியாம வா .. ஒரு மணி நேரம் போதும். இந்த மாஸ்டர் காசெல்லாம் கேட்க மாட்டாரு!” என்று சொன்னான். அன்று முதல் ” ஸ்பெசல் கிளாஸ் “ என்ற பொய்யை சொல்லிக்கொண்டு தினமும் மாலை அங்குதான் வாசம். அது என்னவோ இந்த அப்பாடலுக்கு அவர்கள் தினமும் ஆடுவார்கள், கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிப்போன பின்பும் இந்தப்பாடல் மட்டும் அலுக்கவேயில்லை.

ஒருமுறை இந்த பாடலின் நடன அமைப்பை  மாற்றவேண்டி மாஸ்டர் இந்த படத்தின் வீடியோ கேசெட்டை கொண்டுவந்தார். அதுவரை கேட்டுகொண்டே இருந்த ஆனால் பார்த்திராத அப்பாடலை அப்போதுதான் பார்த்தோம். படத்தின் பெயர் “கண்ணே கனியமுதே!!” என்று இருந்தது, முதன்முதலாக இந்த பாடலை டிவி டேக்கில் பார்த்தபோது உறைந்து போனேன். நாங்கள் ஆடியதெல்லாம் ஒரு ஆட்டமா! என்று சொல்லுமளவுக்கு அங்கே மிக பெரிய பாவனைகள் இருந்தன. அமலா .. அடடடா .. என்ன சொல்லுவேன், ஆடும் மயில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அன்றுதான் பார்த்தேன். மயில் கூட தோற்றுவிடும், அவ்வளவு அழகான பரதம் அமலாவின் நடனம். அமலாவுடன் ஆடும் பெண்கள் எல்லோரு சாதாரண சினிமா குரூப் டான்சர் குழு பெண்களாக தெரியவில்லை. அவர்களும் அமலாவுக்கு போட்டியிடும் விதத்தில் ஆடினார்கள், ஒவ்வொரு நடன பாவனைகளும் அசத்தி எடுத்தன. அப்போதுதான் எங்கள் மாஸ்டர் சொன்னார்.. “ அருமையா இருக்குல்லே .. இதக்கு பாட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தவா சாதாரண ஆள் இல்லே.. நடனமணி சித்ரா விஸ்வேஸ்வரன் என்று கூறினார்,

சித்ரா விஸ்வேஸ்வரன் பற்றியெல்லாம் பிறகுதான் தெரிந்துகொண்டேன், ஆனால் இந்தப்பாடலுக்கு அவர் நடனம் அமைத்தது மிக அருமையான கோரியோகிராபி. எப்போதும் சினிமா பரதநாட்டியத்திற்கு அமைக்கும் ரகு மாஸ்டர் / கலா மாஸ்டர் பாணி வேறு, நிஜ பரதநாட்டியம் வெறும் எனபதை இந்த பாடல்தான் சொல்லித்தந்தது. மிக அசத்தலான முத்திரைகளை நடனத்தில் அமைத்திருந்தாலும், இந்த பாட்டிற்கு ஆடிய அமலா நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்டார். இதற்கு முன்பு “மைதிலி என்னை காதலி” படத்தில் “ஒரு பொன்மானை நான் காண” பாடலுக்கு அமல பரதம் ஆடினார். ஆனால் அது சினிமா பரதநாட்டியம், ஆனால் இப்பாட்டில் நிஜ பரதநாட்டியத்தில் அமலாவின் நடனதிறமை பளிச்சிடும். அமலா ஆடும்போது அவர் தலையில் சூடியிருக்கும் மல்லிகைப்பூ தனியாக பரதம் ஆடுகிறது பாருங்களேன். அழகோ அழகு.

அந்த பாட்டின் இசை என்ன ஒரு சாதரணமா ? எம்.எஸ்.வி யின் பிந்திய காலப் பாடல் என்றாலும் மிக அற்புதமாக இசை தந்திருப்பார். பாடலை ஆரம்பிக்கும் வரிகள் மட்டும் சசிரேகா பாடியிருப்பார், பிறகு எல்லாம் ஜேசுதாசின் அதகளம்தான் , என்ன ஒரு வசீகர குரல் ஜேசுதாசுக்கு , ஒவ்வொரு முறையும் இந்த பாடலில் அவரின்  குரலை கேட்கும்போது நெஞ்சமெல்லாம் வண்ணங்கள் பரவி மேகமாய் மாறி நீலம் பூத்து அதில் பறவைகள் பறந்து செல்லும் காட்சியில் நான் ஒன்றி நிற்கும்போது திடீரென்று மேகம் கருத்து மழை பெய்ததுபோல ஒரு சிலிர்ப்பு.

“ மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ! கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ..... ! என்று ஜேசுதாஸ் பாடும்போது நிஜமாகவே மழை பொழிந்தது போல ஒரு உணர்வு. பாரதியாரின் வரிகளின் ஒவ்வொரு வார்த்தையிலும்  சிலிர்த்து போகிறோம். என்ன ஒரு பாடல். பாரதியார் எழுதிய  இந்த பாடலுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா விஸ்வேஸ்வரன் நடனம் அமைத்ததும், எம் எஸ் வி இசை அமைத்ததும், அமலா ஆடியதும் என ஒவ்வொன்றும் வரலாற்று பெருமை வாய்ந்தவை என்றே சொல்லாம்.

இப்படத்தில் இன்னொரு விசயமும் இருக்கிறது , “மாலைமதி “ என்ற வார்த்தை எண்பதுகளில் மிக மிக முக்கியமானது, எத்தனை பேர் இப்போது ஞாபகம் வைத்திருப்பீர்கள். அந்த வார இதழ் இல்லாத வீடே இருந்திருக்காது. நாங்கள் பார்த்த எல்லா உமா அக்கா, லலிதா அக்கா, ராசம்மா அக்கா, மாணிக்காள், திலகா அக்கா என எல்லோருமே எப்போதுமே மாலைமதி, ராணி முத்துயோடே திரிவார்கள். விகடன் கூட அதற்க்கு பிறகுதான்,  தாவணி அக்காக்களின் காதல்களும் சோகங்களும் கூட இந்த மாலைமதி ராணி முத்துவில் அடங்கியிருந்தன.

மாலைமதியில் விமலா ரமணி எழுதிய “உலா வரும் நெஞ்சங்கள்” என்ற அற்புதமான கதைதான் இப்படத்தின் கதை. மிக அற்புதமான கதையின் கருவை கொண்டு உருவாகிய இப்படம் படமாக்கப்படும்போது ஏனோ திரைக்கதை சொதப்பலால் ஓடவில்லை. படத்தை யார் கண்ணன் அவர்கள் இயக்கியிருந்தார், சசிரேகா துரதிர்ஷ்டமான பாடகி, அன்றைய மிக திறமையான எஸ் பி பி, ஜேசுதாஸ் ஆகியோரின் குரலுக்கும் திறமைக்கும் ஈடு கொடுக்க முடியாத காரணத்தாலேயே அவர் நல்ல நல்ல பாடல்கள் பாடியிருந்தாலும் அவ்வளவாக மிளிரவில்லை. ஆனால் மறக்க இயலா கானங்களில் இது மிக முக்கியமான பாடல்தான்.

நின்னையே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
பொன்னையே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)

 - 4தமிழ்மீடியாவிற்காக: Viji Connect


 

மறக்க இயலா காணங்கள் முன் பதிவுகள் :

மறக்க இயலாகானங்கள்: " நிலா ...நீ... வானம் ... காற்று... "

மறக்க இயலா கானங்கள்: “அடிப்பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை....“

மறக்க இயலா கானங்கள்: " உதயா உதயா உளறுகிறேன்.. உயிரால் உயிரை எழுதுகிறேன் "

மறக்க இயலா கானங்கள்: "நந்தா என் நிலா "

மறக்க இயலா கானங்கள்: " இது மௌனமான நேரம் "

மறக்க இயலா கானங்கள்: " என் கண்மணி உன் காதலி "

மறக்க இயலா கானங்கள்: " போறானே..போறானே.."

மறக்க இயலா கானங்கள்: "விழியில் விழுந்து இதயம் நுழைந்து.."

மறக்க இயலா கானங்கள்: "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ... "

மறக்க இயலா கானங்கள்‬: " என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..."

மறக்க இயலா கானங்கள் : மழையும் நீயே .. வெய்யிலும் நீயே

மறக்க இயலா கானங்கள் : "என்னிலே மஹா ஒலியோ.. "

comments powered by Disqus